சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பாஜ மாவட்ட நிர்வாகிகளுடன் தமிழிசை ‘திடீர்’ ஆலோசனை
சென்னை: கட்சியை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார். தமிழக பாஜ தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கட்சியை பலப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கட்சியை பலப்படுத்துவதற்காக கிராமம், தோறும் மக்களை சென்று சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் உள்ள 3 மாவட்டங்கள் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று காலை நடந்தது.
கூட்டத்துக்கு மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். இதில், அமைப்பு பொது செயலாளர் மோகன் ராஜூலு, துணை தலைவர் சக்ரவர்த்தி, மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன், மாநில செயலாளர்கள் கே.டி.ராகவன், ஆதவன் உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்துவது, 2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் தமிழகத்தில் தற்போது நிலவும் சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், உள்ளாட்சி தேர்தலில் பாஜ வேட்பாளர் வாபஸ் பெற்றதற்கான காரணம் குறித்தும் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசிக்கப்பட்டது.