என்எல்சியில் 39வது நாளாக ஸ்டிரைக்: மத்திய அமைச்சரை சந்திக்க தொழிற்சங்கங்கள் முடிவு
நெய்வேலி: என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 39வது நாளாக வேலைநிறுத்தம் மேற்கொண்டு வரும் நிலையில் சென்னையில் இன்று மதியம் பேச்சுவார்த்தை நடக்கிறது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனையும் தொழிற்சங்கங்கள் சந்திக்க முடிவு செய்துள்ளன. நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று 39வது நாளாக வேலைநிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்த போதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. இது தொடர்பாக, நிரந்தர தொழிற்சங்கங்கள் சார்பில் தொமுச பொதுச்செயலாளார் ராஜவன்னியன், தலைவர் திருமாவளவன், பொருளாளர் அண்ணாதுரை, அதொஊச தலைவர் அபு ஆகியோர் நேற்று மதியம் என்எல்சி மனிதவளத்துறை இயக்குனர் சரத்குமார் ஆச்சார்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்த விளக்க கூட்டம் நேற்றிரவு நடந்தது. பின்னர் தொமுச பொது செயலாளர் ராஜவன்னியன் கூறியதாவது:
பேச்சுவார்த்தையின் போது, ஒரு நாளைக்கு ரூ.95 வரை ஊதிய உயர்வு தர ஒப்புக்கொண்டனர். அதற்கு உடன்பாடு இல்லாததால் உடனடியாக வெளியேறினோம். சென்னையில் நாளை (இன்று) என்எல்சி தலைவர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் இடையே முக்கிய பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது. தொடர்ந்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்து ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்த உள்ளோம் என்றார். சென்னையில் இன்று அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க பேரவை செயலாளர் சின்னசாமி தலைமையில் ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பினரும் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. 39வது நாளாக வேலைநிறுத்தம் தொடர்ந்து வரும் நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் சென்னையில் இன்று மதியம் நடைபெறும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் தொழிலாளர்கள் உள்ளனர்.