விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது
சென்னை: தமிழக சட்டம், ஒழுங்கு குறித்து விவாதிப்பதற்காக விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் 3 நாட்கள் நடைபெறுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஆளும் கட்சியினர் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் பொதுமக்கள் உட்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே, தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், கட்சி அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கடந்த 18ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த், கவர்னர் ரோசையாவை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். ஜெயலலிதா கைது தொடர்பாக தமிழகத்தில் உள்ள சூழ்நிலை குறித்தும் அவ்வப்போது விஜயகாந்த் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழகத்தில் தற்போதுள்ள சட்டம், ஒழுங்கு பிரச்னை உள்ளிட்டவற்றை விவாதிக்கும் வகையில் 3 நாட்கள் தேமுதிக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வருகிற 24ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கட்சி தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். இதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மற்றொரு அறிக்கையில், தேமுதிக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வருகிற 25ம் தேதி காலை 10 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக் கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட தேமுதிகவின் மாவட்ட செயலாளர், மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட பொருளாளர், மாவட்ட துணை செயலாளர்கள் நான்கு பேர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் 2 பேர், பொதுக்குழு உறுப்பினர்கள் 5 பேர் என 14 பேர் மட்டும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். 26ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.