ஏழுமலையான் அணிந்த புடவையுடன் பக்தர்களுக்கு ஆண்டாள் தரிசனம்
திருவில்லிபுத்தூர்; திருப்பதி ஏழுமலையான் அணிந்திருந்த பட்டுப்புடவையை அணிந்து திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.புரட்டாசி மாதம் திருப்பதியில் நடைபெறும் பிரமோற்சவ விழாவில், திருப்பதி ஏழுமலையான் அணிந்து கொள்வதற்காக, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை உரிய மரியாதையுடன் கொண்டு செல்லப்படும். ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து கொண்டு பிரமோற்சவத்தின 5வது திருநாளன்று திருப்பதி சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.அதேபோல் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் அணிந்து கொள்ள, திருப்பதியிலிருந்து சீனிவாச பெருமாள் அணிந்த பட்டுப்புடவை மற்றும் 2 வெண்குடைகளை திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் வழங்குவார்கள்.
சில தினங்களுக்கு முன்பு திருவில்லிபுத்தூருக்கு கொண்டு வரப்பட்ட அந்த பட்டுப்புடவை மற்றும் வெண்குடைகளை திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நிர்வாகத்தினர் மேளதாளம் முழங்க பூரண மரியாதையுடன் வரவேற்றனர்.திருப்பதியிலிருந்து கொண்டு வரப்பட்ட பட்டுப் புடவையை ஆண்டாளுக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று கோயிலில் நடந்தது. இதற்காக கோயிலில் நேற்று சிறப்பு பூஜைகளும், தீப ஆராதனைகளும் நடந்தன. ஆண்டாள் ரெங்கமன்னாரோடு ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருப்பதியில் சீனிவாச பெருமாள் அணிந்த பட்டுப்புடவையை ஆண்டாள் அணிந்திருந்த காட்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.