பொன்னேரி கரையில் செடிகளால் விபத்து: வாகன ஓட்டிகள் அச்சம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பொன்னேரி கரையில் தடுப்புகளை மறைக்கும் வகையில் செடி, கொடிகள் மண்டி கிடக்கின்றன. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். காஞ்சிபுரம் நகரின் நுழைவு பகுதியில் 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொன்னேரி ஏரி காஞ்சிபுரம் பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. சுமார் 1 கி.மீ. தூரம் கொண்ட இந்த ஏரிக்கரை, நெடுஞ்சாலைத்துறை சார்பில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருவழி பாதையாக இருந்த இந்த ஏரிக்கரை கடந்த திமுக ஆட்சியின்போது, சுற்றுலாத் துறையின் பொது நிதியின் கீழ் 4 வழிப்பாதையாக மாற்றப்பட்டது. சாலையின் மையப்பகுதியில் அழகு செடிகள், அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டன.
இதனால், இந்த ஏரிக்கரையில் வாகனங்கள் அதிவேகமாக செல்லத் துவங்கின. இந்த ஏரிக்கரை 30அடி உயரத்தில் இருப்பதால், இங்கு, விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலை துறையினர் சாலையின் இரு புறங்களிலும் அலுமினிய தகடு தடுப்புகளை அமைத்தனர்.தற்போது, இந்த தடுப்புகள் செடி, கொடிகளால் மறைந்துள்ளன. இதைப் பற்றி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக உள்ளனர். பொன்னேரி கரையில் பெரும் விபத்து ஏற்படுவதற்குள், சாலை ஓர தடுப்புகளை மறைத்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.