நில பேரத்தில் விதிமீறல் இல்லை; சோனியாவின் மருமகனானது ராபர்ட் வதேரா செய்த தவறு: திக்விஜய் சிங் பேட்டி
சண்டிகர்: ராபர்ட் வதேரா எந்த வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.அரியானாவில் விதிமுறைகளை மீறி நில பேரத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா மீது எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த விவகாரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி ஹூடா அரசு ஒப்புதல் அளித்ததாக பிரதமர் மோடி பிரசாரத்தின் போது குற்றம் சாட்டியிருந்தார். இதனை விசாரித்த தேர்தல் ஆணையம் இதில் எந்த வித விதிமுறை மீறலும் இல்லை என அறிவித்தது. இதற்கிடையில் அரியானா அரசு முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என பாஜ தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
வதேரா மீது தவறான குற்றசாட்டுகளை எழுப்பி வரும் பாஜவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் நேற்று கூறுகையில், கட்சி தலைவர் சோனியாவின் மருமகன் வதேரா எந்த விதிமுறை மீறலிலும் ஈடுபடவில்லை. அவர் தேச அளவிலோ, சர்வதேச அளவிலோ எந்த சட்டத்தையும் மீறவில்லை. அவர் செய்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். சோனியாவுக்கு மருமகனாக ஆனதுதான் அவர் செய்த தவறு. ஒவ்வொரு தேர்தலின் போதும் இது போன்ற விவகாரம் எழுப்பப்படும். பின்னர் அப்படியே அமுங்கி விடும் என்றார். மேலும் அவர் கூறுகையில், அரியானா முதல்வர் ஹூடா மீது எந்தவொரு கிரிமினல் வழக்குகளும் கிடையாது. தேர்தல் நல்ல முறையில் நடைபெறும் என்றும், மீண்டும் 3வது முறையாக காங்கிரஸ் அரியானாவில் அரியணையில் ஏறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார்.