காவிரியில் உரிய நீரை பெற்றுத் தர வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை
சென்னை: காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை உடனே பெற்றுத் தர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் சம்பா பயிருக்கு போதிய தண்ணீர் கிடைக்காது. வாய்க்கால் உரிய நேரத்தில் தூர்வாரப்படாததால், அணையில் இருந்து 18 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டும் கடைமடை பகுதிக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்டதால், குடி தண்ணீருக்கு கூட மக்கள் அவதிப்படுகின்றனர்.
மத்தியில் பாஜ அரசு பொறுப்பேற்றவுடன் வர்த்தக வங்கிகளில் விவசாய கடன் வழங்குவதில் மெத்தன போக்கு கடைபிடிக்கிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளுக்கு ரூ.74 ஆயிரம் கோடி பயிர் கடன் ரத்து செய்யப்பட்டது. தமிழக விவசாயிகளின் நலன் கருதி, மத்திய அரசு பயிர் கடன் வழங்குவதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு படி கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை முழுமையாக உடனடியாக பெற்றுத் தர வேண்டும். அப்போது தான் சம்பா பயிர்கள் காப்பாற்றப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.