சென்னை: கிரானைட் கற்கள் மோசடி தொடர்பான சகாயம் குழு விசாரணையில், தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விலை மதிப்பற்ற கிரானைட் கற்கள் கிடைக்கின்றன. அதேபோல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அரிய வகை தாது மணல் கிடைக்கிறது. இந்த இயற்கை வளங்களின் மூலம் கிடைக்கும் வருவாயை, அதிகாரிகளின் ஆதரவு பெற்ற சில தனி மனிதர்கள் கொள்ளையடிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் கிரானைட், தாது மணல், ஆற்றுமணல் ஆகிய இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப் பட்டதால் அரசுக்கு ரூ.4.5 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக உத்தேச மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விசாரணை நடத்த முயன்ற அதிகாரிகள் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்படுள்ளனர்.
கனிமக் கொள்ளை குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசை வலியுறுத்தியும், அதை ஏற்க அரசு மறுத்துவிட்டது. தற்போது, உயர் நீதிமன்றமே தலையிட்டு கனிமக் கொள்ளை குறித்து விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து கடந்த மாதம் 11ம் தேதி ஆணையிட்டது. ஆனால், இதுவரை சகாயம் தலைமையிலான குழுவின் விசாரணை தொடங்கவில்லை. இது தொடர்பான விசாரணை அறிக்கையை வரும் 28ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சகாயம் குழுவுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கெடு முடிய இன்னும் 18 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், சகாயம் குழுவை விசாரிக்க இன்னும் அனுமதி அளிக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக அரசு இந்த பிரச்னையில் இரட்டை வேடம் போடுகிறது. இந்த கொள்ளை சம்பவத்தில் அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சகாயம் தலைமையிலான குழுவின் விசாரணைக்கு அரசு முட்டுக்கட்டை போடுவ தால், கனிம ஊழலை மூடி மறைக்க முயல்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.ஊழல் செய்ததற்காக ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நிழலாக ஆட்சி செய்யும் புதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்னொரு ஊழலை மூடி மறைக்க முயற்சி செய்யக் கூடாது. உயர்நீதிமன்ற ஆணைப்படி சகாயம் தலைமையிலான குழுவின் விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.