நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் 490 கோயில்களில் உள்ள சிலைகளை பாதுகாக்க உலோக திருமேனி மையம் நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ரூ.94 லட்சத்தில் கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் மிகவும் பாரம்பரியம் மிக்க சுவாமி சிலைகள் உள்ளன. மூலஸ்தானத்தில் உள்ள சிலைகளை தவிர பல கோயில்களில் உற்சவர் சிலைகள் பாதுகாப்பற்ற முறையில் உள்ளன. இதனால் முக்கிய கோயில்களில் திருட்டு சம்பவங்களும் நடந்துள்ளன. இதை தடுக்கும் வகையிலும், விலைமதிப்பற்ற இந்த சிலைகளை பாதுகாக்கும் பொருட்டு அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பு பெட்டக மையம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள 490 கோயில்களில் இருக்கும் உற்சவர் சிலைகளை பாதுகாக்கும் வகையில், உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையம், நாகர்கோவில் நாகராஜா கோயில் வளாகத்தில் கட்டப்பட்டு வருகிறது. ரூ.94 லட்சத்தில் இதன் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
சுமார் 15 அடி உயரத்தில் சுற்றிலும் கான்கிரீட் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கூரை மட்டுமின்றி, தரை தளமும் இரும்பு கம்பிகள் கட்டப்பட்டு கான்கிரீட் போடப்பட்டு உள்ளது. பூமிக்கு அடியில் இருந்து யாரும் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டதும் குமரி மாவட்ட கோயில்களில் உள்ள உற்சவர் சிலைகள் இங்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். தினமும் ஒரு நேர பூஜை சிலைகளுக்கு நடைபெறும். மேலும் பொதுமக்கள் பார்வைக்கும் அனுமதி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
குமரி மாவட்டத்தில் ஐம்பொன்னால் ஆன சிலைகள் அதிகம் உள்ளன. இவை அனைத்தும் இந்த மையத்துக்கு கொண்டு வரப்படும் என்பதால், நாகராஜா கோயில் மிகவும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படும் என தெரிகிறது. இதற்கிடையே கோயில்களில் மூலவர் சிலைகள், உண்டியல்கள் திருட்டை தடுக்கும் வகையில் அலாரங்கள் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன. வங்கிகளில் உள்ளது போல், கோயிலுக்குள் திருடர்கள் புகுந்து சிலைகள் மீதோ, உண்டியல் மீதோ கை வைத்தால் உடனடியாக அலாரம் அடிக்கும் வகையில் இவை பொருத்தப்பட்டு வருகின்றன.