வக்கீல்களுக்கு அனுமதி மறுப்பு: சினிமா தியேட்டரில் பரபரப்பு
சென்னை: மது அருந்தியதாக கூறி சினிமா தியேட்டருக்குள் வக்கீல்களை அனுமதிக்க மறுத்த செக்யூரிட்டி மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை அண்ணாசாலையை ஒட்டி அமைந்துள்ள தியேட்டர் காம்ப்ளக்ஸ் ஒன்றில் நேற்று மாலை சினிமா பார்ப்பதற்காக 15 வக்கீல்கள் வந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தியேட்டரில் பணிபுரிந்த செக்யூரிட்டி வக்கீல்கள் 15 பேரையும் உள்ளே அனுமதிக்க மறுத்தார். இதை தொடர்ந்து நிர்வாகத்தரப்புக்கும், வக்கீல்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தகவலறிந்த 50க்கும் மேற்பட்ட வக்கீல்கள் தியேட்டர் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த அண்ணாசாலை போலீசார் தியேட்டரில் செக்யூரிட்டியாக பணிபுரிந்த சேத்துப்பட்டு தேவராஜ் (37), அவருடைய நண்பர் பிரபாகரன் (29) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.