வெளிநாட்டு டூர், தேர்தல் பிரசாரம் இதை தவிர மோடி செய்தது என்ன? காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு
மும்பை: நரேந்திரமோடி பிரதமர் பதவி ஏற்ற பிறகு வெளிநாட்டு டூர், தேர்தல் பிரசாரம் ஆகியவற்றை தவிர வேறு எதையும் செய்யவில்லை என காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா தாக்கி பேசியுள்ளார்.மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் வருகிற 15ம் தேதி நடைபெற உள்ள சட்டபேரவை தேர்தல்களை முன்னிட்டு பாஜ சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்து வருகிறார். தற்போது அவரது பிரசாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரதமராக இருக்கும் ஒருவர் தேசிய பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் கிராமம், கிராமமாக சென்று பிரசாரம் செய்வதா என பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தரப்பிலும் இது குறித்து விமர்சனம் எழும்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா நிருபர்களிடம் கூறுகையில், தேச பாதுகாப்பு விஷயத்தில் பிரதமர் மோடி மெத்தனமாக செயல்படுகிறார். எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை முறையாக கையாள தவறிவிட்டார். இது குறித்த விவகாரங்களில் கவனம் செலுத்தாமல் வெளிநாட்டு டூர், தேர்தல் பிரசாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இது போன்ற விவகாரங்களில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் குறித்து முறையான நடவடிக்கை மேற்கொள்ள தனது கவனத்தை செலுத்த வேண்டும். 1971க்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தற்போது தான் மிகவும் மோசமான தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த விசயத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதித்து வருகிறார் என்று தெரிவித்தார்.