ஐஆர்என்எஸ்எஸ் 1-சி செயற்கை கோளுடன் பிஎஸ்எல்வி ராக்கெட் 16ல் விண்ணில் பாய்கிறது: கவுன்ட் டவுன் 13ல் துவக்கம்
சென்னை: இந்தியாவின் அதிநவீன நேவிகேஷன் செயற்கை கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சியுடன், பிஎஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 16ம் தேதி அதிகாலை 1.32க்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 67 மணி நேர கவுன்ட் டவுன் 13ம் தேதி காலை 6.32க்கு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி-26 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சி செயற்கை கோள் இன்று அதிகாலை 1.56க்கு விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது. தொழில் நுட்ப கோளாறால், தேதி குறிப்பிடாமல் ராக்கெட் விண்ணில் செலுத்தும் திட்டத்தை விஞ்ஞானிகள் ஒத்தி வைத்தனர். இந்நிலையில், வரும் 16ம் தேதி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பிஎஸ்எல்வி சி-26 ராக்கெட் மூலம், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சி செயற்கை கோள் வரும் 16ம் தேதி அதிகாலை 1.32 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இதற்கான 67 மணி நேர கவுன்ட் டவுன், 13ம் தேதி காலை 6.32க்கு துவங்குகிறது. இதற்கான இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சி செயற்கைகோள் கடல்வழிப்பாதை, பேரிடர் மேலாண்மை, வாகனங்கள் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவும். இந்த ரகத்தில் மொத்தம் 7 ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்படும் என விஞ்ஞானிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். அதன்படி கடந்த 2013 ஜூலை 1ம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஏவும், கடந்த ஏப்ரல் 4ம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-பியும் விண்ணில் செலுத்தப்பட்டன. இது 3வது செயற்கை கோளாகும். ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சி செயற்கைகோள் விண்ணில் செலுத்திய பிறகு, கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹசன் மையத்தில் இதன் தகவல்களை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.