வாஷிங்டன்: அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று காலை தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு புறப்பட்டார். இன்று மாலை அவர் டெல்லிக்கு வருகிறார். புறப்படுவதற்கு முன்பாக தேங்க்யூ அமெரிக்கா என்று கூறி விடைபெற்றார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் பயணமாக கடந்த 25ம் தேதி இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு 50 நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, நேற்று அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு நாடுகளும் பாதுகாப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் இன்று காலை ஏர் இந்தியா ஒன் விமானம் மூலம் இந்தியாவுக்கு புறப்பட்டார்.
முன்னதாக நேற்று அமெரிக்க இந்தியர்கள் வர்த்தக கவுன்சிலில் கலந்து கொண்டு மோடி பேசும் போது, ‘தேங்க்யூ அமெரிக்கா. எனது பயணம் வெற்றிகரமாக முடிந்தது. நான் இங்கிருந்து கிளம்பி நேராக விமான நிலையத்துக்கு செல்கிறேன். எனது பயணம் வெற்றிகரமாகவும், திருப்திகரமாகவும் அமைந்தது‘ என்று தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து ஆண்ட்ரூஸ் விமான தளத்துக்கு சென்றார். அங்கு இந்திய தூதர் ஜெய்சங்கர், அமெரிக்க அரசின் உதவி செயலாளர் நிஷா தேசாய் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து மோடியை வழி அனுப்பி வைத்தனர். மேலும் மோடி விமான நிலையத்துக்கு வந்த போது அவரை அமெரிக்க அரசின் துணை செயலாளர் வில்லியம் பர்ன்ஸ் மோடியை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுள்ள பிரதமர் மோடி இன்று மாலை டெல்லியை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தின் போது, மோடி நியூயார்க்கில் நான்கு நாட்கள் இருந்தார். அப்போது ஐநா சபையில் உரை, உலக நாடுகளின் தலைவர்களுடன் சந்திப்பு, இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேச்சு, மேடிசன் சதுக்கத்தில் உரை, அமெரிக்க வர்த்தக தலைவர்களுடன் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் பின்னர் 5வது நாள் வாஷிங்டனில் அமெரிக்க எம்பிக்களுடன் சந்திப்பு, அதிபர் ஒபாமாவுடன் விருந்து, ஒபாமாவுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை, வெளிநாட்டினர் வர்த்தக கவுன்சிலில் உரை, கிரவுண்ட் ஜீரோ நினைவிடத்தில் அஞ்சலி, மார்ட்டின் லூதர் கிங் நினைவிடத்தில் அஞ்சலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.