காரைக்காலில் மதுக்கடை கேஷியரிடம் ரூ. 2.5 லட்சம் வழிப்பறி 2 பேர் கைது
காரைக்கால்: புதுவை மாநிலம், காரைக்கால் மேலவாஞ்சூர் பகுதியில் உள்ள தனியார் மதுக்கடை ஒன்றில் சேதுராமன்(42) என்பவர் கேஷியராக உள்ளார். கடந்த ஏப்ரல் 5ம் தேதி அன்று கடையில் இருந்த ரூ.2.5 லட்சம் ரொக்கத்தை ஒரு பையில் எடுத்துக்கொண்டு காரைக்காலில் உள்ள வங்கிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.திரு.பட்டினம் போலகம் அருகில் சென்ற போது, அவரை பின்தொடர்ந்து 2 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள், திடீரென சேதுராமனை வழிமறித்து, அவர் மீது மிளகாய் பொடி தூவி, அவரிடமிருந்த ரூ.2.5 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
திரு.பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவந்தனர். நேற்று மாலை திரு.பட்டினம் அடுத்த வாஞ்சூர் எல்லையில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமாக வந்த பைக் ஒன்றை மறித்து விசாரணை செய்தனர். விசாரணையில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்(40), அம்பிகாபதி(38) என்பது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.அப்போது அவர்கள் மதுக்கடை கேஷியர் சேதுராமனிடம் ரூ.2.50 லட்சத்தை வழிப்பறி செய்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை தேடிவருகின்றனர்.