Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
01
Oct
கல்வி ஞானம் தரும் கலைமகள் வழிபாடு


நமக்குள் இருக்கும் அறியாமை, மிருகத்தனம், மந்தபுத்தி ஆகிய 3 தீயசக்திகளும் புதுப்புது வடிவெடுத்து வந்து, நம் வாழ்வை நரகமாக்கி விடுகின்றன. அத்தகைய மிருகத்தனம் கொண்ட அரக்கனை முப்பெரும் தேவிகளும் அழிக்கும் 9 தினங்களே நவராத்திரி திருவிழாவாகும்.நவராத்திரியின் 9-வது நாளான நாளை சரஸ்வதி வழிபாடு ஆகும். அன்று தான் நம் வாழ்வுக்கு ஏற்றம் தரும் புத்தகம், பேனா உள்பட பல்வேறு இயந்திர கருவிகளை வைத்து சரஸ்வதியை வழிபாடு செய்கிறோம். இதன்மூலம் நம்முடைய அறியாமை நீங்கி, அறிவு வளர்ச்சி மேலோங்கும் என்பது நம் அனைவருடைய நம்பிக்கை.புராண காலத்தில் மதம் பிடித்த காட்டு யானை போல் மகிஷாசுரன் என்ற அரக்கன், தேவர்களையும் முனிவர் பெருமக்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனது கொடுமையைத் தாங்க முடியாமல் பரமசிவன், மகாவிஷ்ணு, பிரம்மாவிடம் தேவர்கள் முறையிட்டனர். அவர்களோ, மகிஷாசுரனின் மரணம் சர்வ வல்லமை பொருந்திய ஒரு பெண்ணால்தான் சாத்தியம் என்று ஒருமித்த குரலில் கூறினர்.

இதைக் கேட்ட தேவர்கள், முப்பெரும் தேவிகளான பார்வதி, லட்சுமி, சரஸ்வதியிடம் வேண்டுகோள் விடுத்தனர். மூன்று தேவிகளும் ஒரே சக்தியாகி துர்க்காதேவியாக உருவெடுத்தனர். அவர்களுக்கு சிவன் சூலம் தர, மகாவிஷ்ணுவோ சக்கரத்தை தந்தார். அக்னிதேவன் தனது சக்தியையும், வாயுதேவன் வில் ஆயுதத்தையும் வழங்கினார்.மகிஷாசுரனை சம்ஹாரம் செய்யும் ஆவேசத்துடன் துர்க்கை போர்க்களம் புகுந்தாள். போர்க்களத்தில் தன்னெதிரே நின்றிருந்த மகிஷாசுரனை பார்த்ததும் அன்னையின் சிந்தனை மாறியது. மகனை போன்றிருக்கும் இவனைக் கொல்வதா என, அவனை பாசத்துக்கு அடிமையாக்க எண்ணி பாசாங்குசத்தை ஏவினாள். ஆனால், அரக்க குணம் படைத்த மகிஷாசுரனுக்கு அன்னையின் பாசம் புரியவில்லை. அவனது மூர்க்கத்தனம் அதிகமாகவே, அவனைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அன்னை தீர்மானித்தாள்.

நவராத்திரியை குறிப்பிடும் வகையில் 9 நாட்களும் துர்க்காதேவிக்கும் மகிஷாசுரனுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றது. முதல் 3 நாட்கள் பார்வதி தேவியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவியும் போரிட்டனர். கடைசி 3 நாட்களில் சரஸ்வதி தேவி போர் புரிந்தாள். 9-வது நாளன்று தனது படைக்கலங்களை வைத்து சரஸ்வதிதேவி பூஜை செய்தாள். 10-வது நாளான விஜயதசமியன்று முப்பெரும் தேவிகளும் ஒன்றிணைந்து மகிஷாசுரனை வெற்றி கொண்டனர் என்று புராணம் கூறுகிறது.நவராத்திரியின் 9-வது நாளில் (நாளை) சரஸ்வதியை வழிபடும் விதமாக, நமது வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் பொருட்களை வைத்து பூஜைகள் மேற்கொள்வதே சரஸ்வதி வழிபாடாகும். அதேபோல், வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் சரஸ்வதி, யாகத்தை காப்பவள். கல்வி, அறிவு, ஞானம், தேஜஸ் ஆகியவற்றை அளிப்பவள். நமக்கு இனிய வாழ்க்கையும் கொடுப்பவள். கலைகளுக்கு அதிபதியாக விளங்குபவள். யாகத்தின் இறுதியில் கூறப்படும் ஸ்வாஹா என்ற பதம் சரஸ்வதி தேவியை குறிக்கும்.

இத்தகைய சிறப்புமிக்க சரஸ்வதி தேவி வெண்பட்டு உடுத்தி, வெள்ளை தாமரையில் வீற்றிருப்பாள். அக்கமாலை, சுவடி என்னும் புத்தகத்தை இரு கைகளிலும், மற்ற இரு கரங்களும் வீணையை மீட்டியபடி இருக்கும். தூய்மையின் அடையாளமாக சரஸ்வதி திகழ்வதாக ஆகம நூல்கள் கூறுகின்றன. இவளது நான்கு கரங்களும் 4 வேதங்களையும், கண்களே எண், எழுத்தாகவும், வீணையே ஓங்கார மந்திரமாகவும் திகழ்கின்றன. பல்வகை காவியங்களில் சிந்தாதேவி, நந்தாவிளக்கு, வானோர் தலைவி என சரஸ்வதி தேவியை குறிப்பிடுகின்றன. சமணர்களும் பவுத்தர்களும் கூட சரஸ்வதி வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.தமிழ்நாட்டில் சரஸ்வதிதேவிக்கு திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் தனிக் கோயில் அமைந்துள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சன்னதியின் வெளிப்பிரகாரத்தில் சரஸ்வதி சிலைகள் உள்ளன. தஞ்சை மாவட்டம், கண்டியூர் சிரகண்டீஸ்வரர் கோயிலில் மட்டும் பிரம்மாவும் சரஸ்வதியும் தம்பதி சமேதராக காட்சி தருகின்றனர்.

சரஸ்வதி வழிபாடு: சரஸ்வதி பூஜையன்று வீடுகளிலும் அலுவலகங்களிலும் பூஜை செய்து வழிபடுவது வழக்கம். சரஸ்வதி வழிபாட்டுக்கு முன்பாக, வழிபாடு செய்யும் இடத்தை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் சரஸ்வதி படத்தை வைத்து, அவற்றுக்கு பல்வேறு பூக்கள் மற்றும் பிற பொருட்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.பின்னர் நமக்கு பயன்படும் புத்தகங்கள், குழந்தைகளின் பாடப் புத்தகங்கள், பேனா, பென்சில் போன்ற எழுதுபொருட்களை வைத்து சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். அலுவலகத்தில் நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் போன்ற பொருட்களுக்கும், இயந்திர பொருட்களுக்கும் சந்தனம், குங்குமம், பூ இவற்றை வைக்கலாம்.சரஸ்வதி பூஜையின் போது கலசம் வைத்து கலைமகளை வழிபடலாம். கலசம் வைத்து, அதில் அம்மனை முறைப்படி எழுந்தருள செய்து பூஜிப்பதால் கூடுதல் பலன் கிடைக்கும். பின்னர் ஒரு வாழை இலை விரித்து, அதில் பழங்கள், பொரிகடலை, சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் மற்றும் கொண்டைக் கடலை சுண்டல் ஆகியவற்றை படைக்கலாம். எல்லா செயல்களுக்கும் முழு முதலானவர் விநாயகர். மூலப் பரம்பொருள். எனவே விநாயகரை வணங்கிவிட்டு, சரஸ்வதி பூஜையை தொடங்க வேண்டும்.

பூஜையின்போது துர்க்கா லட்சுமி சரஸ்வ தீப்யோ நம என்றும், மாலா ஸ்ரிணீ புஸ்தக பாஸ ஹஸ்தாம், பாலாம்பிகாம் ஸ்ரீ லலிதாம் குமாரீம், குமார காமேஸ்வர கேளீ லோலாம், நமாமீ கௌரீம் நவ வர்ஷ தேஸ்யாம் என்ற ஸ்லோகத்தை கூறி வழிபடலாம். பின்னர், படைக்கப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் சாம்பிராணி மற்றும் கற்பூர ஆரத்தி காட்டி வழிபட வேண்டும்.விஜயதசமி திருநாள்: நவராத்திரியின் 10-வது நாள் மகிஷாசுரன் என்ற அரக்கனை முப்பெரும் தேவியரும் வெற்றி கொண்ட நாள். இதுவே விஜயதசமி தினமாக கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜையன்று புத்தகங்களை வைத்து பூஜிக்கிறோம். ஞான நூல்களே அறிவை அளிக்கக் கூடியவை. அந்த நூல்களை வெறுமனே வழிபாடு செய்வதோடு நின்றுவிடாமல், மறுநாள் விஜயதசமியன்று அவற்றை கற்றும், கேட்டும், சிந்தித்தும், ஆராய்ந்தும் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அறியாமை எனும் அரக்கனை ஆயுதங்களாலோ, செல்வத்தாலோ வெல்ல முடியாது.

அவனை வெல்லக்கூடிய ஆயுதம் அறிவு மட்டுமே. அவற்றை விஜயதசமியன்று நாம் சிரமேற்கொண்டு பயன் பெற வேண்டும்.விஜயதசமியன்று குழந்தைகளை புதிதாக பள்ளியில் சேர்ப்பது, புதிய தொழில் தொடங்குவது, கணக்குகளை துவங்குதல் போன்றவை நடைபெறும். புதிதாக இசை, பாட்டு, நடனம் போன்ற கலைகளைப் படிக்க துவங்கலாம். புதிதாக பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு அன்று கோயில்களில் அட்சர அப்யாசம் எனும் எழுதும் வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். இவற்றின் ஒரே நோக்கம் - அறியாமை என்னும் இருளை, அறிவு என்னும் ஒளியால் விரட்டுவதுதான். அன்னை சரஸ்வதியின் அருளால் நம்மிடம் அறிவாற்றல் பெருகி, நாடெங்கும் அன்பு ஓங்கி செழிக்கட்டும்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement