மும்பை: மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ‘மண்ணின் மைந்தர்கள்’ என்ற பிரசாரம் பெரிதாக எடுபடவில்லை. இதனால் தேசிய கட்சிகளுக்கு இணையாக மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா போன்ற கட்சிகளால் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. வரும் 15ம் தேதி அங்கு சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இம்முறை வாக்காளர்களை ஈர்க்க புதிய கோஷத்துடன் களமிறங்க நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து ராஜ்தாக்கரே கூறுகையில், ‘சட்டபேரவை தேர்தலில் மகாராஷ்டிராவுக்கு மாநில சுயாட்சியை வலியுறுத்தி பிரசாரம் செய்வோம். மகாராஷ்டிராவுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும். மாநில அரசே ரயில்களை இயக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு தேவையான அளவுக்கு மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரயில் சேவையை செய்ய முடியும். நாம் ஏன் மத்திய அரசையும், தேசிய கட்சிகளையும் இதற்காக நம்பியிருக்க வேண்டும்’ என்றார். இதுகுறித்து நவநிர்மான் சேனா தலைவர் ஒருவர் கூறுகையில், ‘மாநிலத்தின் வளர்ச்சியை நோக்கமாக கொண்டு எங்களது கட்சியின் பிரசாரம் அமையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், மாநில சுயாட்சி வேண்டும் என்று ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார். இது எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்துள்ளது’ என்றார்.