புதுடெல்லி: அரியானா மற்றும் மகாராஷ்டிராவில் வரும் 4ம் தேதி முதல் பிரதமர் மோடி, தேர்தல் பிரசாரம் செய்யவிருக்கிறார். அரியானா மற்றும் மகாராஷ்டிராவில் சட்டபேரவை தேர்தல் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பாஜ தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதற்காக பல்வேறு தேர்தல் வியூகங்களையும் வகுத்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலை போலவே இம்முறையும் மோடி அலையை உருவாக்கி, வாக்காளர்களை ஈர்க்க பாஜ முடிவு செய்துள்ளது. இதற்காக பிரதமர் மோடியின் பிரமாண்ட பிரசார கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பாஜ மூத்த தலைவர் ஒருவர் கூறும் போது, ‘வரும் 4ம் தேதி முதல் 13ம் தேதி வரை அரியானா மற்றும் மகாராஷ்டிராவில் மோடி பங்கேற்கும் பிரசார கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. சுமார் 10 பிரசார கூட்டங்களில் மோடி பங்கேற்று பேச உள்ளார். பாஜ மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும் மகாராஷ்டிராவில் பிரசாரம் செய்கின்றனர்’ என்றார். அதே சமயம், அரியானாவில் பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் அத்வானி, ஜோஷி இடம் பெறவில்லை.
முதல்கட்டமாக, அரியானாவில் ஒரு இடத்திலும், மகாராஷ்டிராவில் 3 இடங்களிலும் பிரதமர் மோடி பேசவிருக்கிறார். பாஜ முதல்வர்களான மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், சட்டீஷ்கர் முதல்வர் ராமன்சிங், கோவா முதல்வர் மனோகர் பரிக்கர், குஜராத் முதல்வர் ஆனந்தி பென் பட்டேல் ஆகியோரும் மகாராஷ்டிராவில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். இரண்டு மாநிலங்களிலும் பாஜவின் உயர் மட்ட தலைவர்களான அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி உள்ளிட்டோரும் பிரசாரம் செய்யஉள்ளனர்.