சென்னை: ஆவின் பால் கலப்படம் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த வைத்தியநாதனை சென்னையில் போலீசார் நேற்று கைது செய்தனர். மோசடிக்கு அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் உதவியது அவர் அளித்த வாக்குமூலத்தில் அம்பலமாகி உள்ளது.ஆவின் நிர்வாகத்துக்கு, பால் கூட்டுறவு ஒன்றியங்கள் ஒப்பந்த வாகனம் மூலம் பால் சப்ளை செய்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் பாலில் கலப்படம் செய்தல், பால் திருட்டு போன்ற நடவடிக்கைகளில் வாகனங்கள் ஈடுபட்டால், ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படும்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், பால் கூட்டுறவு ஒன்றியங்களில் இருந்து ஆவின் நிர்வாகத்துக்கு பால் சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தை அசோக்நகரைச் சேர்ந்த வைத்தியநாதன் பெற்றார். இவர், தென்சென்னை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக இருந்தார். தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் தனது ஒப்பந்தத்தை புதுப்பித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான 104 டேங்கர் லாரிகள் கூட்டுறவு ஒன்றியங்களில் இயங்கி வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கு சொந்தமான வாகனம் மூலம், விழுப்புரம் ஒன்றியத்தில் இருந்து சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் அலுவலகத்துக்கு பால் கொண்டு சென்ற வாகனத்தை நடுவழியில் நிறுத்தி, 2 ஆயிரம் லிட்டர் பால் திருடினர். அதற்கு பதில், பால் டேங்கரில் தண்ணீர் கலக்கப்பட்டபோது கையும் களவுமாக பிடிபட்டனர்.இதைத் தொடர்ந்து ஆவின் நிர்வாகம் வைத்தியநாதனுக்கு வழங்கியிருந்த வாகன ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இது குறித்து உள்துறைச் செயலாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகார் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டார். இதையடுத்து எஸ்பி பெருமாள், டிஎஸ்பி கஜேந்திர வரதன், இன்ஸ்பெக்டர்கள் பால் ஸ்டீபன், முரளி ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், வைத்தியநாதன் பாலில் கலப்படம் செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. உடந்தையாக இருந்த ஆவின் ஊழியர்கள் 3 பேரை ஆவின் நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்தது. இதற்கிடையில், கான்ட்ராக்டர் வைத்தியநாதனை, அதிமுகவில் இருந்து நீக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். மேலும் அவரை கைது செய்யவும் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து வைத்தியநாதன் மற்றும் மோசடியில் உடந்தையாக இருந்த அவரது மனைவி ரேவதியை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
அவர் நேற்று சென்னைக்கு வந்தபோது சிபிசிஐடி போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடம் சிபிசிஐடி போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலத்தை வைத்தியநாதன் அளித்துள்ளார். அதன் விவரம்:முதலில் சிறிய அளவில் லாபம் பார்க்க வேண்டும் என்பதற்காக தான் பாலில் கலப்படம் செய்தேன். பின்னர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கிடைத்ததால் பெரிய அளவில் கலப்படம் செய்து கோடிக்கணக்கில் லாபம் பார்க்க ஆசைப்பட்டேன். அதன்படி, நாள்தோறும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து மோசடி செய்தேன். கலப்படம் செய்து சம்பாதிக்கும் பணத்தில், சில முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு மாதந்தோறும் கமிஷன் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால் தான் தொடர்ந்து பாலில் கலப்படம் செய்ய முடியும். அரசியல்வாதிகள் முதல் பல முக்கிய உயர் அதிகாரிகள் வரை எனக்கு உறுதுணையாக இருந்ததால் தான் இவ்வளவு பெரிய மோசடி செய்ய முடிந்தது. இவ்வாறு வாக்குமூலத்தில் வைத்தியநாதன் கூறியுள்ளார்.
பாலில் கலப்படம் செய்ய அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் துணை போனதை வைத்தியநாதன் நேரடியாக ஒப்புக் கொண்டுள்ளதால், சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகள் மற்றும் அதிகாரிகளை கைது செய்ய சிபிசிஐடி போலீசர் முடிவு செய்துள்ளனர். இன்னும் ஒரு சில தினங்களில் ஒவ்வொரு அதிகாரிகளாக சிக்குவார்கள் என தெரிகிறது. இதற்கிடையில், அசோக்நகர் 55வது தெருவில் உள்ள வைத்தியநாதனின் வீட்டுக்கு இன்று காலை 8 மணிக்கு சிபிசிஐடி போலீசார் சென்று சோதனை நடத்தினர். இதில், பல முக்கிய ஆவணங்கள் கைபற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணைக்குப் பின், வைத்தியநாதன் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். மேலும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.