அணுமின் நிலையத்தில் 200 பேருக்கு வேலை நல்லாத்தூர் மக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 200 பேருக்கு வேலை அளிக்கவேண்டும் என நல்லாத்தூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நல்லாத்தூர் ஊராட்சி தலைவர் ருக்குபெருமாள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் பாஸ்கரன் மற்றும் எஸ்பி விஜயகுமாரிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர். அந்த மனு விவரம்:திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நல்லாத்தூர் ஊராட்சியில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்களது கிராமம் விவசாயத்தை நம்பியுள்ளது. பனங்காட்டுச்சேரியில் கடந்த 45 ஆண்டுக்கு முன்பு கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகத்துக்காக போர்வெல் அமைத்து லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. கடந்த 10 ஆண்டுக்கு முன்பு அப்போதைய கலெக்டரும், அணுமின் நிலைய நிர்வாகமும் அணுமின் நிலையத்தில் நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த 200 பேருக்கு வேலை தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை யாருக்கும் வேலை வழங்கவில்லை.
இந்தநிலையில், மீண்டும் போர்வெல் அமைத்து ராட்சத குழாய் மூலம் குடிநீர் எடுத்து செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். விவசாயத்தை அழிக்கும் வகையில் தண்ணீர் எடுத்து செல்லப்படுவதால் எங்களது வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த பிரச்னையில் கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.கல்பாக்கம் அணுமின் நிலைய அதிகாரிகள் மற்றும் துறை அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.