மீனம்பாக்கம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் கொல்கத்தாவில் இருந்து வந்த ஏர் இந்தியா, பெங்களூரில் இருந்து வந்த ஜெட் லைட், ஐதராபாத்தில் இருந்து வந்த கோஏர் ஆகிய விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் வானில் வட்டமடித்தது. மழை 2 மணி நேரத்துக்கும் மேல் நீடித்ததாலும் சூறைக்காற்று 20 நிமிடமே நீடித்தது. காற்று ஓய்ந்ததும் விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்கியது. அந்த நேரத்தில் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.
பயணிகள் வாக்குவாதம்: இதற்கிடையே உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில் கடந்த ஒரு மாதமாக சாதாரண பயணிகளை ஏற்றுவதற்கு வரும் வாகனங்கள் போர்ட்டிகோ பகுதிக்கு அனுமதியில்லை. இதனால் பயணிகள் நடந்து சென்று கார் பார்க்கிங் பகுதியில் நிற்கும் வாகனங்களில்தான் ஏறி செல்ல வேண்டும். ஆனால் அரசு வாகனங்கள் மட்டும் போர்ட்டிகோ பகுதிக்கு வர அனுமதிக்கப்படுகிறது. நேற்று மழை பெய்து கொண்டிருந்தபோது உள்நாட்டு விமானங்களில் வந்த பயணிகள் நடந்து செல்ல முடியாமல் போர்ட்டிகோவில் நின்றனர்.
ஆனால் அரசு வாகனங்கள் மட்டும் போர்ட்டிகோ பகுதிக்கு வந்து அதிகாரிகளை அழைத்து சென்றதால் மற்ற பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். ‘நோயாளிகள், வயதானவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். ஆனால் அரசு வாகனங்கள் மட்டும் வர அனுமதிக்கிறீர்கள், ஏன் இந்த பாகுபாடு பார்க்கிறீர்கள், மழை நேரத்திலாவது அனுமதியுங்கள் என கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். ‘விமான நிலைய அதிகாரிகள் உத்தரவுபடி உங்கள் வாகனங்களை அனுமதிக்க கூடாது என போலீசார் கூற, ‘அப்படி என்றால் அரசு வாகனங்களை தடுத்து நிறுத்தி மறியல் செய்வோம்‘ என பயணிகள் கூறினர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது. இதனால் விமான நிலைய அதிகாரிகளும், போலீசாரும் பயணிகளை சமாதானம் செய்து வாகனங்களை உள்ளே அனுமதித்தனர்.