அமெரிக்காவில் கொழுக் மொழுக் பூனை ஸ்லிம் ஆக மாறியது
வாஷிங்டன்:அமெரிக்காவில் 13 கிலோ எடையுடன் ஒரு பூனை தெருக்களில் உருண்டு கொண்டிருந்தது. அந்த பூனையை ஒருவர் மீட்டு விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் சேர்த்து விட்டார். தற்போது அந்த பூனை உடல் எடை குறைந்து, ஸ்லிம்மாக மாறி விட்டது. அமெரிக்காவில் டென்னசி மாகாணத்தில் நாஸ்வேலி நகரில் 13 கிலோ எடையுடன் ஒரு குண்டு பூனை சுற்றி கொண்டிருந்தது. அதன் உடலில் ஏகப்பட்ட ரோமங்கள் காணப்பட்டன. அவற்றில் கழிவுகள் ஒட்டியிருந்தன. இதைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த லாடிஸ்டா லாம்ப்லே என்ற பெண், அந்த பூனையை எடுத்து கொண்டு போய் விலங்குகள் காப்பகத்தில் சேர்த்தார்.அந்த குண்டான பூனையை பார்த்ததும் காப்பகத்தில் இருந்தவர்கள் முதலில் மிரண்டனர். பின்னர், அந்த பூனையின் உடலில் இருந்த அழுக்கு ரோமங்களை அகற்றினர். இதில் அந்த பூனையின் எடையில் 2 கிலோ குறைந்தது.அந்த பூனையை நாள்தோறும் ட்ரெட் மில் மிஷினில் பயிற்சி எடுக்க வைத்தனர். இதனால் அதன் எடை தற்போது 7 கிலோ அளவுக்கு குறைந்துள்ளது. லியோ என்றழைக்கப்படும் அந்த பூனை இப்போது ஸ்லிம்மாக காட்சியளிக்கிறது. ஸ்லிம்மான உடல்வாகுடன் லியோ கேட்வாக் செய்வதைப் பார்த்து, மற்ற பெண் பூனைகள் அதற்கு ரொமான்டிக் லுக் விட்டு வருகிறது என்று காப்பகத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.