வீட்டை சுத்தம் செய்வதற்கு செல்போன் கண்ட்ரோலில் செயல்படும் ரோபோ கிளீனர்
லண்டன்:வீட்டை சுத்தம் செய்ய செல்போன் கண்ட்ரோலில் செயல்படும் புதிய ரோபோ வேக்குவம் கிளினர் வந்து விட்டது.இங்கிலாந்தில் மக்கள் எல்லா வேலைகளுக்கும் ரோபோக்களை பயன்படுத்தும் நிலை வந்து விட்டது. வீட்டை சுத்தப்படுத்த மட்டும் பழைய வேக்குவம் கிளினரையே உபயோகப்படுத்தி கொண்டிருந்தனர். லண்டனை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஜேம்ஸ் டைசன், புதிதாக ரோபோ கிளீனர் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டி வந்தார். அவரது கம்பெனியில் நடந்த 16 ஆண்டு ஆராய்ச்சியின் பலனாக, தற்போது புதிய ரோபோ கிளீனர் தயாராகி விட்டது. மொத்தம் ரூ.2760 கோடி முதலீட்டில் இந்த திட்டத்தை அவர் செயல்படுத்தியுள்ளார். டைசன்360ஐ என்னும் புதிய ரோபோ கிளினர் பார்ப்பதற்கு சிறிய பெட்டி போல் காணப்படுகிறது. இதன்மூலம், வீட்டின் சமதரையில் இருக்கும் குப்பைகளை அகற்றுகிறது. அதன்பிறகு வீட்டை பளிச்சென துடைத்து விடுகிறது.
இதில் பொருத்தப்பட்ட கேமரா லென்ஸ் மூலம் 360 டிகிரிக்கு சுழன்று, வீட்டின் மூலை முடுக்குகளில் எங்கு குப்பை இருக்கிறது, எங்கு துடைக்க வேண்டும் என்பதை துல்லியமாக கணித்து செயல்படுகிறது. வீட்டை விட்டு வெளியே சென்று விட்டாலும் நமது செல்போனில் இருந்தே வீட்டில் உள்ள இந்த ரோபோ கிளினரை கண்ட்ரோல் செய்யலாம்.டைசன் 360ஐ ரோபோ கிளினரை ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால், பின்னர் தன்னைத் தானே அது சார்ஜ் செய்து கொள்ளும் வசதி கொண்டது. ஆனால், மாடிப்படிகளில் மட்டும் இதை பயன்படுதுவது கஷ்டம் என்று டைசன் கூறுகிறார். இவரது புதிய டைசன் 360 ஐ ரோபோ கிளினரை டோக்கியோவில் நடைபெறும் ரோபோ கண்காட்சியில் வைத்திருக்கிறார்.அடுத்த ஆண்டு இறுதிக்குள் இது இங்கிலாந்து சந்தையில் கிடைக்கும். இதன் விலை 750 பவுண்டுகள்(சுமார்ரூ.73,000) என்று ஜேம்ஸ் டைசன் உறுதி கூறுகிறார்.