குன்னூர்: குன்னூர் அருகே பஸ் நிலையத்தில் கரடியுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போதை ஆசாமியை பயணிகள் காப்பாற்றினர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கொலக்கம்பை பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பகல் நேரத்திலேயே குட்டிகளுடன் நடமாடும் கரடிகளால் பொதுமக்களும், பள்ளிசெல்லும் மாணவர்களும் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், கைகாட்டி பஸ் நிலைய பகுதியில் குட்டியுடன் ஒரு கரடி கடந்த ஒரு வாரமாக சுற்றித் திரிகிறது. நேற்றிரவு பஸ் நிலையத்துக்குள் கரடி தஞ்சமடைந்தது. அப்போது, லூசியானா பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளி ராம்குமார் (32) என்பவர், குடிபோதையில் கைகாட்டி பஸ் நிலையத்துக்கு வந்து பஸ்சுக்காக காத்திருந்தார்.
இருட்டாக இருந்ததால் பக்கத்தில் இருந்த கரடியை, யாரோ பயணி உட்கார்ந்து இருக்கிறார் என நினைத்து, பஸ் எத்தனை மணிக்கு வரும் என கேட்டுக் கொண்டிருந்தார். அவர் பீடி பற்ற வைக்க தீப்பெட்டியை உரசிய போது, கரடி உருவம் லேசாக தெரிந்துள்ளது. போதையில் இருந்த அவர், அதை நாய் என நினைத்து சீ...போ.. என விரட்டினார். இதற்கிடையில், பஸ் வந்தது. பஸ்சின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை பார்த்ததும் கரடியும் குட்டியும் துள்ளி குதித்தன. அப்போது தன் பக்கத்தில் இருந்தது கரடி என்பது ராம்குமாருக்கு தெரிந்தது. உடனே அலறியடித்துக் கொண்டு பஸ்சை நோக்கி ஓடினார். பஸ்சில் இருந்த பயணிகளும் அவரை உள்ளே இழுத்து கரடியிடம் இருந்து காப்பாற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், நகைச்சுவையையும் ஏற்படுத்தியது.