மண்ணெண்ணெய் ஆந்திராவுக்கு கடத்தல்
திருவள்ளூர்: ஆந்திராவுக்கு வேனில் கடத்திய 800 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. வேன் டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து திருவள்ளூர் வழியாக ஆந்திராவுக்கு ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வெள்ளவேடு அருகே இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை போட்டனர். அதில் 4 பேரலில் 800 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது. வேன் மற்றும் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. வேன் டிரைவர் மேமம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (38), மண்ணெண்ணெய் கடத்தி சென்ற திருமழிசை கிராமத்தை சேர்ந்த தண்டபாணி (59), சித்திரைபாண்டியன் (40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.