சூர்யாவின் அலறல் சத்தம் : காதை விட்டு போகல லிங்குசாமி ஸ்பீக்கிங்
சென்னை: சூர்யாவின் அலறல் சத்தம் இன்னும் என் காதில் ஒலிக்கிறது என்றார் லிங்குசாமி.லிங்குசாமி இயக்கும் படம் ‘அஞ்சான். இப்படத்தின் முன்னோட்டம் யூ டியூபில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட 2 நாளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து சூர்யாவுடன் ரசிகர்கள் சந்திப்புக்கு யுடிவி நிறுவனம், திருப்பதி பிரதர்ஸ் ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியில் லிங்குசாமி பேசும்போது, ‘சூர்யாவை இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அது நிறைவேறி இருக்கிறது. இப்படத்தில் சூர்யாவை எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்களோ அதையெல்லாம் மனதில் வைத்து படமாக்கி இருக்கிறேன். இப்படம் மறக்க முடியாத அனுபவமென்றால் அதிலும் ஒரு சம்பவம் என்னை எந்த காலத்திலும் மறக்க முடியாததாக ஆக்கிரமித்திருக்கிறது. சண்டை காட்சி ஒன்றில் 130 கிலோ எடையுள்ள ஒரு ஸ்டன்ட் நடிகர் பாய்ந்து வந்து சூர்யா காலில் விழுந்ததையும் அப்போது வலி தாங்க முடியாமல் சூர்யா அலறியதையும் மறக்க முடியாது. சூர்யாவுக்கு காயம்பட்ட இடத்தை எட்டிப்பார்க்கக்கூட தைரியமில்லாமல் இருந்தேன். இதில் ஏற்பட்ட காயத்துக்கு டாக்டரிடம் சூர்யா சிகிச்சை பெற்றார். பிறகு மீண்டும் அதே இடத்தில் அதே ஸ்டன்ட் வீரருடன் சூர்யா நடித்தார் என்றார். பேட்டியின்போது சூர்யா, தயாரிப்பாளர் தனஞ்செயன் உடனிருந்தனர்.