நாகர்கோவில்: குமரி மாவட்டம் ஆளூரை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். மத்திய அரசு ஊழியர். இவர் சென்னையில் உள்ளார். நேற்று முன் தினம் காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர்களுடன், சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தார். கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் எஸ்.2 பெட்டியில் இவர்கள் 9, 12, 15ம் சீட்டில் பயணித்தனர். ரயில் வேகமாக செல்லும் போது இந்த பெட்டி அதிக சத்தத்துடன் குலுங்கியது. ரயிலின் வேகம் அதிகரிக்கும் சமயங்களில் பெட்டியின் ஆட்டமும் அதிகமாக இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள் ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரரிடம் கூறினர். அவரோ, டி.டி. ஆரிடம் புகார் செய்யுங்கள் என்றார்.
இதற்கிடையே ரயில் விழுப்புரம் வந்தது. உடனடியாக விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்த அதிகாரிகளிடம் புகார் கூறினர். இதையடுத்து ரயில்வே அதிகாரிகள், மெக்கானிக் சிலர் வந்து அந்த பெட்டியின் அடியில் டார்ச் லைட் அடித்து பார்த்தனர். ஆனால் சரி செய்யவில்லை. தொடர்ந்து ரயில் புறப்பட அனுமதி அளிக்கப்பட்டது. வழக்கம் போல் பெட்டி குலுங்க தொடங்கியது. இதனால் மீண்டும் பயணிகள் சிலர் டி.டி.ஆர். அறைக்கு சென்று புகார் கூறினர். டி.டி.ஆரிடம் புகார் எழுதி வைக்க லாக் புக் தாரு ங்கள் என்றனர். ஆனால் அதற்கு அவர் பதில் எதுவும் சொல்லவில்லை.
இவர்கள் லாக் புக் கேட்டு விட்டு வந்த சில நிமிடங்களில் குண்டர்கள் போல் 4, 5 பேர் வந்தனர். அவர்கள் ஜாகீர் உசேனிடம் தேவையில்லாமல் பிரச்னையில் மாட்டி கொள்ளாதீர்கள். ஒழுங்காக ஊருக்கு செல்லுங்கள் என மிரட்டும் தொனியில் கூறினர். இதை பார்த்ததும் பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே ஜாகீர் உசேன் மற்றும் அவரது உறவினர்கள் ரயில் பெட்டியில் தகராறு செய்தனர் எனக்கூறி, திருச்சியில் ரயில் நிலையத்தில் வைத்து, அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் பெட்டி யில் ஏறினர். அப்போது மற்ற பயணிகள் உண்மை நிலையை விளக்கினர். இதனால் போலீசார் சென்றுவிட்டனர். இது போன்ற பிரச்னையால் விடிய, விடிய அந்த பெட்டியில் இருந்தவர்கள் தூங்கவில்லை. நேற்று மாலை ஜாகீர் உசேன் குடும்பத்தினர் இந்த பிரச்னை குறித்து நாகர்கோவில் ரயில் நிலைய மேலாளரிடம் புகார் அளித்தனர்.