ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவி மையம்
சென்னை: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், மருத்துவமனையின் முழு விவரம் மற்றும் துறைகளை பற்றி நோயாளிகள் தெரிந்து கொள்ள உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவமனை வளாகத்தில் பல அடுக்குமாடி கட்டிடம் உள்ளதால், இங்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு இங்குள்ள துறைகள் மற்றும் வார்டுகளை பற்றி தெரிந்து கொள்வதில் நீண்ட நாளாக குழப்பம் இருந்து வந்தது.
இதையடுத்து தற்போது, நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் தாங்கள் செல்ல வேண்டிய வார்டு மற்றும் துறைகளை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளும் வகையில், மருத்துவமனை நிர்வாகம் இங்கு உதவி மையங்களை அமைத்துள்ளது. புறநோயாளிகள் சீட்டு கொடுக்கும் அனைத்து மாடிகளிலும், இந்த உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர முக்கியமான துறைகள் உள்ள கட்டிடங்களிலும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில்,3 சூபர்வைசர்கள் தலைமையில் 13 செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இங்கு வருபவர்களுக்கு தேவையான விபரங்களை இவர்கள் அளிப்பார்கள். நோயாளிகளிடம் பொறுமையுடன் பழகக் கூடிய வகையிலும், மருத்துவமனையின் அனைத்து விவரங்களையும் தெரிவிக்கும் வகையிலும், உதவி மையத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.