புதுப்பெண்ணுக்கு தொல்லை கல்லூரி ஆசிரியர் கைது
சேலம்:புதுப்பெண்ணுக்கு செல்போனில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த திருச்சியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் அருகேயுள்ள அரியானூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (31). வக்கீல். இவருக்கும், தஞ்சாவூரைச் சேர்ந்த சர்மிளாவுக்கும் (27) கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. சர்மிளா, திருச்சியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். திருமணம் முடிந்த பிறகு, கணவருடன் சேலத்திற்கு வந்து விட்டார்.
இந்நிலையில், அதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் ராஜபாளையம் பெரியகடை பஜார் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் (28), சர்மிளாவுடன் நண்பராக பழகி வந்துள்ளார். இவர், செல்போனில் சர்மிளாவுடன் ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதுபற்றி கேட்ட அவரது கணவரிடமும் ஆபாசமாக பேசியுள்ளார்.
இதற்கிடையே நேற்று திருச்சியில் இருந்து சேலம் வந்த பேராசிரியர் ரமேஷ்குமார், கொண்டலாம்பட்டி புத்தூர் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த வக்கீல் ரமேஷிடம் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வக்கீல் ரமேஷ், கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பேராசிரியர் ரமேஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.