தயாரிப்பாளர் ஆனது எப்படி? ரகுமான் விளக்கம்
சென்னை: படம் இயக்கும் எண்ணம் எனக்கில்லை என்றார் ஏ.ஆர்.ரகுமான்.இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சொந்த படம் தயாரிக்கிறார். விரைவில் இயக்குனராகவும் ஆக உள்ளார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. இது பற்றி ரகுமான் கூறும்போது, ‘எங்களது முதல் தயாரிப்பு தொடங்குவதற்கான நேரம் கனிந்து வந்திருக்கிறது. இந்தி படமாக இது உருவாக உள்ளது. அதை மேற்பார்வையிடுவேன். நான் ஊரில் இல்லாத சமயங்களில் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்துக்கொள்ள நல்ல குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. தயாரிப்பு என்பது பெரிய பொறுப்பு. பாலிவுட் இசை அமைப்பாளர் விஷால் பரத்வாஜ் இசை அமைப்பாளராக இருந்தபோதும் படம் இயக்குவதிலும் வெற்றி கண்டிருக்கிறார்.
ஆனால் என்னை பொறுத்தவரை விஷாலைபோல் படம் இயக்கும் எண்ணம் இல்லை. இயக்குனர் பணிக்கு முழுநேரத்தை செலவிட வேண்டும். இப்போதைக்கு அந்தளவுக்கு நேரம் செலவிட என்னால் முடியாது. எந்தவொரு படத்திலும் இசை முக்கிய பங்கு வகிக்கிறது. மணிரத்னம், டேனி பாயல் போன்றவர்களுடன் பணியாற்றும்போது பட உருவாக்கம் பற்றி நிறைய கேள்விகள் கேட்பேன். தயாரிப்பில் ஈடுபடுவதற்கு இதுபோன்ற செயல்பாடு எனக்கு உதவியாக இருந்தது.இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.