மதுரை: மதுரை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடம் இருந்து 514 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக எஸ்பி விஜயேந்திர பிதாரி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:மதுரை மாவட்டத்தில் கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றங் களை தடுக்க 170 டூவீலர்களில் 340 போலீசார் புற நகர் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் வில்லூர்-மறவப்பட்டி ரோட்டில் 5 பேர் கொண்ட கும்பலை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பரமக்குடியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (30), செந்தில் (29), சங்கர் (27), ரமேஷ் (33), ஆறுமுகம் என்ற பச்சை பாம்பு (64) என்பதும் மதுரை மாவட்டம் குன்னத்தூரை சேர்ந்த 10 பெண்களில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 55 பவுன் நகைகளை வழிப்பறி செய்ததும் தெரிந்தது.
அவற்றை பறிமுதல் செய்து, 5 பேரையும் கைது செய்தோம். மேலும் கடந்த 3 மாதங்களில் 48 வழக்குகளில் 20 குற்றவாளிகளிடம் இருந்து ரூ.75 லட்சம் மதிப்புள்ள 350 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருமங்கலத்தில் 109 பவுன் நகைகளை கொள்ளையடித்த கும்பலை கைது செய்துள்ளோம்.மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்களில் தற்போது கைதானவர்களுக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. புறநகர் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டு தபால் தந்தி நகரில் நடந்த வங்கி கொள்ளையில் முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன. விரைவில் குற்றவாளிகள் சிக்குவார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.