நாடு முழுவதும் 795 சேனல்களுக்கு மத்திய அரசு அனுமதி: மக்களவையில் அமைச்சர் தகவல்
புதுடெல்லி: நாடு முழுவதும் இதுவரை 795 டிவி சேனல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் தெரிவித்துள்ளார். புதிய சேனல் தொடங்க அனுமதி கோரி 235 விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தனியார் டிவி சேனல்கள் குறித்து மக்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் அளித்த பதில்:நாடு முழுவதும் 795 டிவி சேனல்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதல் செய்தி ஒளிபரப்பு சேனல்கள் மற்றும் பொழுதுபோக்கு சேனல்கள் அடங்கும். கடந்த 3 ஆண்டுகளில் புதிய சேனல் தொடங்க அனுமதி கேட்டு வந்த விண்ணப்பங்களில் 235 நிலுவையில் உள்ளது.
இதில் 105 சேனல்கள் மலையாளம் மற்றும் கன்னட மொழி சம்பந்தப்பட்டதாகும். விவசாயிகளுக்காக கிரிஷி என்ற பிரத்யேக சேனல் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சேனல் எப்போது தொடங்கப்படும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. இதற்காக காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை. தூர்தர்ஷன் சேனல்களை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது ஒன்றிரண்டு சேனல்கள் மட்டுமே டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை விரைவில் உயரும். இவ்வாறு ஜாவேத்கர் கூறினார்.