ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக ஆந்திர கவர்னரிடம் சிபிஐ விசாரணை
ஐதராபாத்: விவிஐபிக்கள் பயணத்துக்காக இத்தாலி நிறுவனத்திடமிருந்து ரூ.3,600 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்கள் கடந்த 2010ம் ஆண்டு வாங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கிடைப்பதற்காக இத்தாலி நிறுவனம் இந்திய விமானப்படை தளபதி உள்பட பலருக்கு ரூ.360 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விமானப்படை முன்னாள் தளபதி எஸ்பி தியாகி மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 9 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இத்தாலி நிறுவனத்துக்காக டெண்டரில் பல திருத்தங்கள் செய்யப்பட்டதை சிபிஐ கண்டுபிடித்தது. டெண்டர் திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்றது. அந்த சமயத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணன், விவிஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி படை தலைவர் வாஞ்சு, உளவுத்துறை தலைவராக இருந்த நரசிம்மன் ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்கள் 3 பேருக்கும் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் கவர்னர் பதவி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஊழல் தொடர்பாக ஏற்கனவே மேற்கு வங்க கவர்னராக இருந்த நாராயணன், கோவா கவர்னராக இருந்த வாஞ்சுவிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. சிபிஐ விசாரணைக்கு பின்னர் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் ஆந்திர கவர்னராக இருக்கும் நரசிம்மனிடம் நேற்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அவர் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 151ன் கீழ் நரசிம்மனின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. சிபிஐ விசாரணைக்கு பின்னர் வாஞ்சு, நாராயணன் பதவி விலகியதை போல் நரசிம்மன் பதவி விலகுவாராக என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.