புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ.7060 கோடியில் 100 ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்படும். மேலும் 4 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்பன உள்பட பல்வேறு அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்டன. நாடாளுமன்ற தேர்தலில் 336 இடங்களை பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து பிரதமராக நரேந்திர மோடி கடந்த மே 26ம் தேதி பொறுப்பேற்றார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 16வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர், ஜூன் 4ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை நடந்தது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். பின்னர், அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் 7ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 14ம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடக்கிறது. ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா நேற்றுமுன்தினம் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ரயில்வே துறையில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். 58 புதிய ரயில்களுடன் பல்வேறு திட்டங்களையும் அவர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, மக்களவையில் நேற்று பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
இதற்கிடையே, கோவாவில் ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ‘முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கஜானாவை காலி செய்து சென்றுள்ளது. எனவே, கடுமையான பொருளாதார நெருக்கடி, பண வீக்கம், விலைவாசி உயர்வு போன்றவை உருவாகியுள்ள சூழலில் நாட்டின் பொறுப்பை ஏற்க வேண்டியதாயிற்று. எனவே, தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு எனது அரசு எடுக்கும் நடவடிக்கை கசப்பு மருந்தாக இருந்தாலும், மக்களுக்கு அதன் பலன் இனிப்பாக இருக்கும்’ என்று தெரிவித்திருந்தார். எனவே, பட்ஜெட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது.நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டம் தொடங்கிய நாளில் இருந்தே விலைவாசி உயர்வு, ரயில் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கேள்வி நேரத்தை ரத்து செய்தும், அவையை ஒத்தி வைத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக திரிணாமுல் பெண் எம்பி தாக்கப்பட்ட விவகாரம் குறித்து அக்கட்சியினர் பாஜ உறுப்பினர்களுடன் மோதலில் ஈடுபடும் நிலை ஏற்பட்டது. இத்தனை பரபரப்புக்கும் மத்தியில்தான் ரயில்வே பட்ஜெட், பொருளாதார அறிக்கை ஆகியவை அவையில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் 11 மணிக்கு அவை கூடியது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 2014-15ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறப்பட்டதாவது:கடந்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்பட்டது. இது மிகப் பெரிய சவாலாக இருந்தது. உலக பொருளாதாரம் தற்போது நெருக்கடியில் இருந்து மீண்டு துளிர் விடத் தொடங்கியுள்ளது. கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட தாமதமான கொள்கை முடிவுகள் காரணமாக பொருளாதார வாய்ப்புகள் பலவற்றை நாம் இழக்க நேரிட்டது. பணவீக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி, பணவீக்கத்தை குறைத்தல் ஆகியவற்றை மையப்படுத்தி புதிய நிதி கொள்கைகள் வகுக்கப்படும். இன்னும் 3, 4 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 8 சதவீதத்தை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்பு திட்டங்கள் சரியான மக்களுக்கு சென்றடைய உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உற்பத்தி துறை மற்றும் உள்கட்டமைப்பு துறைக்கு புத்துணர்ச்சி அளிக்கப்படும். கவர்ச்சி திட்டங்களால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்க அனுமதிக்க முடியாது. நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டும்.
ராணுவத் துறையில் இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் அன்னிய நேரடி முதலீடு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை 4.1 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 9 ஏர்போர்ட்களில் ஆன்லைன் விசா அளிக்கும் முறை அறிமுகம் செய்யப்படும். பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டமாக 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க ரூ.7060 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வங்கிகளுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும்.பிரதான் மந்திரி கிருஷி சிசியன் யோஜனா என்ற பெயரில் புதிய நீர் பாசன திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 24 மணிநேரமும் வீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும். 2019ம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பிட வசதி செய்து தரப்படும். கிராமப்புறங்களில் மின்சார வசதியை மேம்படுத்த தீனதயாள் உபாத்யாய் திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
குஜராத் மாநிலத்தில் சர்தார் படேல் சிலை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயரும். இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பார்வையற்றோர் பயன்பெற புத்தகங்கள் தயார் செய்ய 15 பிரெய்லி மொழி அச்சகங்கள் தொடங்கப்படும். ஏற்கனவே உள்ள 10 அச்சகங்கள் சீரமைக்கப்படும். அஞ்சலகத் திட்டங்களில் கேட்பாரற்று கிடக்கும் பணத்தை தேவையான திட்டங்களுக்கு பயன்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்க கமிட்டி அமைக்கப்படும்.பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி வளர்ச்சிக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்படும். டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். நிர்பயா திட்டத்தில் இருந்து இதற்கான நிதி பெறப்படும். தேசிய ஊரக குடிநீர் திட்டத்திற்கு ரூ.3600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பூர்வாஞ்சலில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அருண் ஜெட்லி அறிவித்தார்.நாட்டின் 84வது பட்ஜெட்: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தது நாட்டின் 84வது மத்திய பட்ஜெட் ஆகும்.மோடி தலைமையிலான பாஜ அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. செவ்வாய் கிழமை ரயில்வே பட்ஜெட்டும் நேற்று பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், மோடி அரசின் முதல் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். அருண்ஜெட்லி தாக்கல் செய்தது நாட்டின் 84வது பட்ஜெட் ஆகும். இவற்றில் இடைக்கால பட்ஜெட்களும் அடங்கும். இதுவரை 25 நிதியமைச்சர்களை இந்தியா கண்டுள்ளது.நாட்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த பெருமை, முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியை சேரும். தமிழரான இவர் கோயம்புத்தூரில் பிறந்தவர். திறமையான வக்கீல், பொருளாதார வல்லுனர் போன்ற சிறப்புகளை பெற்ற இவர், 1947ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி நாட்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது, 1947 ஆகஸ்ட் 15 முதல் 1948 மார்ச் 31 வரையிலான 7.5 மாதங்களுக்கான ரூ.171.15 கோடி பட்ஜெட் ஆகும். அப்போதைய நிதி நிலை பற்றாக்குறை ரூ.25 கோடி.