நெல்லை அருகே இன்று பயங்கரம் சாலையில் ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டி கொலை: பதற்றம்-போலீஸ் குவிப்பு
நெல்லை: நெல்லை அருகே உள்ள கோபாலசமுத்திரம் முனியசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் நம்பியார். இவரது மகன் கார்த்திக் (25). கூலி வேலை செய்து வந்தார். கார்த்திக் இன்று காலை கோபாலசமுத்திரம் மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென ஆயுதங்களுடன் வந்த 9 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. கார்த்திக் தப்பியோட முயன்றார். ஆனால் அவரை விடாமல் துரத்தி சென்ற கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. தகவல் அறிந்த சேரன்மகாதேவி டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. கோபாலசமுத்திரம், பிரான்சேரி பகுதி வழியாக வரும் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசாரின்முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோபாலசமுத்திரத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சமுதாய கொடி கம்பத்தில் செருப்பு ஏற்றி அவமரியாதை செய்தது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. மேலும் அங்குள்ள மாணவியை கேலி செய்ததை தட்டி கேட்டது தொடர்பாக தர்மராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒரு பிரிவினரை சேர்ந்த 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் தொடர்ந்து அப்பகுதியில் இரு தரப்பினரிடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை கார்த்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். தர்மராஜ் கொலை வழக்கில் கார்த்திக்கின் அண்ணன் மகன் சத்யா என்பவர் முக்கிய குற்றவாளியாவார். அதற்கு பழிக்கு பழியாகவே கார்த்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பதற்றத்தை தணிக்க அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.