கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் கடலுக்கு அடியில் நீந்தி கண்காணிக்க கமாண்டோ படைக்கு சிறப்பு பயிற்சி
கன்னியாகுமரி: மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக தீவிரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதலுக்கு பின், நாடு முழுவதும் கடலோர பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடலோர கிராமங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் அவ்வப்போது பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. கடலோர பாதுகாப்பு படை ஏடிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் பாது காப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடலோர பாதுகாப்பு பணிக்காக சிறப்பு கமாண்டோ படைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கமாண்டோ படையினருக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி கடலுக்கு அடியில் நீண்ட நேரம் நீந்தி கண்காணிக்கும் சிறப்பு பயிற்சி நேற்று நடந்தது. கன்னியாகுமரி சின்னமுட்டம் கடலில் நடந்த பயிற்சியை ஏடிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். சின்னமுட்டம் மற்றும் வட்டக்கோட்டையில் பயிற்சி நடந்தது. பின்னர் கூடங்குளம் அணுமின் நிலையத்தையொட்டி உள்ள கடல் பகுதியில் நீந்தி கண்காணிக்கும் பயிற்சி நடந்தது. 10 சிறப்பு கமாண்டோ படையினர் இதில் பங்கேற்றனர். ஆக்ஸிஜன் சிலிண்டரை முதுகில் கட்டியபடி, சிறப்பு கண்ணாடியுடன் முக கவசம் அணிந்து நீந்தி பயிற்சி மேற்கொண்டனர். இதன் மூலம் தீவிரவாதிகள் தண்ணீருக்குள் மூழ்கியவாறு ஊடுருவலை தடுக்க முடியும் என்றும், நீண்ட நேரமாக தண்ணீரில் நீந்தியவாறு கண்காணிக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.