நடிகை ரோகிணி பங்கேற்ற விழாவை போலீசார் நிறுத்தினர் : சேலம் அருகே பரபரப்பு
சேலம்:சேலத்தில் நடிகை ரோகிணி பங்கேற்ற மரக்கன்று நடும் விழாவை போலீசார் பாதியில் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மூக்கனேரியில் மக்கள் அமைப்பு சார்பில் ‘புனித வனம்‘ துவக்க விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை ரோகிணி கலந்து கொண்டார். இவரை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்த கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அமைப்பின் நிர்வாகிகளிடம் உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்துமாறு கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது இன்ஸ்பெக்டர் கண்ணன் கூறுகையில்,``மக்கள் பாதுகாப்பு கருதி நிகழ்ச்சிக்கு முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு அவசியம். இதை உணர்த்தவே தடுத்து நிறுத்தினோம்`` என்றார். உடனே நடிகை ரோகிணி போலீசாரிடம் பேசி சுமுகமான சூழலை ஏற்படுத்தினார். ‘விழாவுக்கு அனுமதி பெற்றிருக்க வேண்டியது அவசியம் தான். தற்பொழுது நிகழ்ச்சி நடத்துவதற்கு தயவு செய்து போலீசார் அனுமதிக்க வேண்டும்‘ என நடிகை ரோகிணி கேட்டுக் கொண்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் அனுமதியளித்தார். தொடர்ந்து நடிகை ரோகிணி, புனித வனம் பகுதியில் மரக்கன்று நட்டார்.