தென் ஆப்ரிக்காவில் 2 மெட்ரோ ரயில்கள் நேருக்கு நேர் மோதல் - 80 பேர் படுகாயம்
ஜோகன்னஸ்பர்க்:தென் ஆப்ரிக்காவின் கிழக்கு கடற்கரையோரம் உள்ள டர்பன் நகரில் நேற்று 2 மெட்ரோ ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 80 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.தென் ஆப்ரிக்க தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து கிழக்கே துறைமுக நகரான டர்பன் நகர் வரை மெட்ரோ ரயில்கள் இயங்கப்பட்டு வருகின்றன. டர்பன் நகரில் இருந்து நேற்று காலை ஒரு மெட்ரோ ரயில் கிளம்பியது. அந்த ரயில் பீரியா என்ற இடத்தில் வந்தபோது, சுரங்க வளைவு ஒன்றில் எதிரே வந்த மற்றொரு ரயிலுடன் வேகமாக மோதியது.இந்த விபத்தில் 2 ரயில்களிலும் இருந்த 80 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே அதிகாரிகளும், மீட்பு படையினரும் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
படுகாயம் அடைந்த பயணிகள் உடனடியாக ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு பாதையில் இரண்டு ரயில்கள் எதிரெதிரே வந்தது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று தென் ஆப்ரிக்க ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.