சென்னை: தமிழ்நாடு அரசு தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை 10 மாடிகள் கொண்டது. பழமையான இந்த கட்டிடத்தை மேம்படுத்தவும், அரசு அலுவலர்கள் பணிபுரிய ஏதுவாகவும் ரூ.28 கோடி செலவில் புதுப்பிக்கும் பணியை முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012 ஏப்ரலில் துவக்கி வைத்தார்.புது கட்டிடம் முழுவதும் குளிர்சாதன வசதி, மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதி, சிறப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய வர்ண பூச்சு, வெளிப்புற சுவர்கள், மேம்படுத்தப்பட்ட உட்புற சாலை வசதிகள், முன்பகுதியில் அழகிய புல்தரையுடன் நீரூற்று, தண்ணீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி போன்ற சிறப்பு அம்சங்களோடு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதை நாளை காலை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.
அதேபோன்று, நாமக்கல் கவிஞர் மாளிகையின் தரை தளத்தில் தலைமை செயலக ஊழியர்களுக்காக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தையும் ஜெயலலிதா நாளை திறந்து வைக்கிறார். புதிய கட்டிடத்தின் பின்புறம் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது.புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகை நாளை திறக்கப்படுவதையொட்டி, பல ஆண்டுகளாக தலைமை செயலக வளாகத்தில் செயல்பட்டு வந்த ‘சாப்பிட வாங்க ஓட்டல் நேற்று முதல் மூடப்பட்டு விட்டது. இந்த கட்டிடத்தில் பொதுப்பணித்துறை அலுவலகம் செயல்படும் என்றும் அதிமுக பிரமுகர் ஒருவருக்கு ஓட்டல் நடத்த அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.