பட்டப்பகலில் துணிகரம் : சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை
திருச்சி: திருச்சி எஸ்.ஐ வீட்டில் 20 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசுகள், ரூ.23 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.திருச்சி கருமண்டபம் ஆர்எம்எஸ் காலனியை சேர்ந்தவர் ராஜா. திருச்சி அரசு மருத்துவமனை சிறப்பு எஸ்ஐ. இவரது மனைவி ஜூலி, மகள்கள் ஜென்னீஸ் ஏஞ்சல், ஜெமீமாபிளஸ்மா. ஜென்னீஸ் ஏஞ்சல் கோவையில் உள்ள கல்லூரியில் படிக்கிறார். ஜெமீமா பிளஸ்மா தனியார் பள்ளியில் படிக்கிறார். ஜெமீமாபிளஸ்மாவை பள்ளிக்கு அனுப்பிவிட்டு துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள மனைவியுடன் ராஜா நாகப்பட்டினம் சென்றார். மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய ஜெமீமா, வீட்டின் கிரில் கேட் பூட்டும் மெயின் கேட் கதவு தாழ்பாளும் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தந்தை ராஜாவிற்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். விசாரணையில், மர்ம நபர்கள், கிரில் கேட் மற்றும் மெயின் கதவு ஆகியவற்றின் 2 பூட்டுகளை உடைத்து உள்ளே சென்று பெட்ரூம் கதவை உடைத்து அலமாரியை திறந்து அங்கிருந்த ரூ.23 ஆயிரம், 20 பவுன் நகைகள், 3 ஜோடி வெள்ளி கொலுசை கொள்ளையடித்து சென்றனர். அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை தடயவிய நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அருகில் உள்ள ஒரு வீட்டில் சில தினங்களாக மராமத்து மற்றும் பெயின்டிங் பணி நடந்து வந்துள்ளது. நேற்று காலை வீட்டை பூட்டி சென்ற ராஜாவை அங்கு பணியில் இருந்தவர்கள் கண்காணித்துள்ளனர். அவர்கள் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வீட்டின் வாசலில் நாய் கட்டப்பட்டிருந்த நிலையில் பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.