மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
மும்பை: மான் வேட்டை வழக்கில் ஜாமீனில் விடுதலையான சல்மான் கானுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.கடந்த 1998ம் ஆண்டு ஜோத்புர் அருகே உள்ள கங்கானி கிராமம் காட்டு பகுதியில் நடந்த ‘ஹம் சாத் சாத் ஹைன் இந்தி பட ஷூட்டிங்கில் சல்மான் கான் கலந்துகொண்டார். அவருடன் நடிகர் சைப் அலிகான், நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம் ஆகியோரும் இருந்தனர். அப்போது மான்களை வேட்டையாடியதாக சல்மான்கான் உள்பட நடிகர், நடிகைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் சல்மானிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்தனர். அவரிடம் அதற்கான உரிமம் காலவதியாகி இருந்தது தெரியவந்தது.
கீழ்கோர்ட்டில் இதுதொடர்பான வழக்கு நடந்தது. இதில் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சல்மான் 2 முறை சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் சல்மான் சார்பில் ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் சல்மானுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ராஜஸ்தான் மாநில அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, 4 வாரத்திற்குள் விளக்கம் தர வேண்டும் என சல்மான் கானுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.