திரிணாமுல் எம்பிக்கள் அமளி : நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா நேற்று ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் 58 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இதில் கவுடாவின் சொந்த மாநிலமான கர்நாடகாவுக்கு 20 ரயில்களும், மேற்கு வங்கத்திற்கு ஒரே ஒரு ரயிலும் அறிவிக்கப்பட்டது. மாஜி மத்திய ரயில்வே அமைச்சரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‘நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல, ஒரு ரயிலையும் மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்’ என்று கடுமையாக தாக்கினார். அதே போல், அவரது கட்சி எம்பிக்களும் நேற்றே மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, பாஜ மற்றும் திரிணாமுல் எம்பிக்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் காணப்பட்டது.
இன்று காலை வழக்கம் போல் நாடாளுமன்றம் கூடியது. முன்னதாக காலை 10 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக கூடிய திரிணாமுல் எம்பிக்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், 11 மணிக்கு மாநிலங்களவை கூடியதும் திரிணாமுல் எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை கூடிய சில நிமிடங்களிலேயே அவையை தலைவர் ஹமீத் அன்சாரி ஒத்திவைத்தார். அதே போல், மக்களவையிலும் இதே பிரச்னையை முன்வைத்து திரிணாமுல் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பகல் 12 மணி வரை அவையை ஒத்தி வைத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.