45 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஜப்பானை புயல் தாக்கியது - 1 லட்சம் பேர் வெளியேற்றம்
டோக்கியோ:ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள ஒகினோவா தீவில் இன்று காலை புயல் தாக்கியது. அங்கு கடலில் 45 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள ஒகினோவா தீவுகளில் இன்று காலை பயங்கர புயல் தாக்கியது. ‘நியோகுரி‘ என பெயரிடப்பட்ட அந்த சக்தி வாய்ந்த புயலால் மணிக்கு 250 கிமீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. புயல் காரணமாக கடலில் 45 அடி உயரத்துக்கு கடலில் ராட்சத அலைகள் எழுந்தன. மழையும் வெளுத்து வாங்கியது. புயல் தாக்குதலில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்குள்ள டிவிக்கள் செய்தி வெளியிட்டன. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
புயல் தாக்குதல் தொடர்பாக அதிகாரிகள் நேற்று அவசர கூட்டம் நடத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த புயலாக கருதப்பட்டதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 1 லட்சம் பேரை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டது. முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஜப்பானில் ஆண்டுக்கு 4 புயல் தாக்குகிறது. ஆனால் ஜூலை மாதம் புயல் தாக்குவது அரிதானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.