நடிகர், நடிகை சாவு வதந்தி : இணைய தள செய்தியால் பீதி
சென்னை: பிரபல நடிகர், நடிகைகள் பற்றி இணைய தளத்தில் அவ்வப்போது பரவும் வதந்தியால் திரையுலகில் குழப்பம் நிலவுகிறது.திரையுலக நட்சத்திரங்கள் பற்றி அவ்வப்போது இணைய தளங்களில் வதந்திகள் வெளியாகும்போது அது பரபரப்பை ஏற்படுத்துகிறது. 2 வருடங்களுக்கு முன் ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டபோது அவரைபற்றி வதந்தி பரவியது. பின்னர் அது பொய் என்று தெரியவந்தது. அதேபோல் கரகாட்டகாரன் ஹீரோயின் கனகா பற்றியும் வதந்தி பரவியது. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு கேரளாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் இறந்துவிட்டதாக அதில் கூறப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கனகா பத்திரிகையாளர்களை அழைத்து விளக்கம் அளித்தார். அதேபோல் சனா கான் என்ற பாகிஸ்தான் நடிகை ஒருவர் கார் விபத்தில் மரணம் அடைந்தார்.
இதில் பெயர் குழப்பம் ஏற்பட்டு தமிழ், இந்தி பட ஹீரோயின் சனா கான் இறந்துவிட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. இந்த குழப்பத்தை ஒரு அறிக்கை மூலம் தீர்த்துவைத்தார் சனா கான். நேற்று முன்தினம் நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பற்றி வதந்தி பரவியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஷாக் ஆனார் எம்.எஸ்.பாஸ்கர். அவர் கூறும்போது,‘தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், குடும்பத்தினர் என பலர் என்னை தொலைபேசியில் அழைத்து உடல்நலம்பற்றி விசாரித்த வண்ணம் இருந்தனர். திடீரென்று இப்படி விசாரிக்க என்ன காரணம் என்று தெரியாமல் தவித்தேன். பிறகு தான் நான் இறந்துவிட்டதாக இணைய தளத்தில் தகவல் வெளியானது பற்றி அறிந்தேன். ஆண்டவன் அருளால் நான் நலமுடன் இருக்கிறேன். இதுபோல் என்னைப்பற்றி வதந்தி யார் கிளப்பியது, எதற்காக இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை என்றார்.