சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் ஒன்று, கடந்த மாதம் 28ம் தேதி இடிந்து விழுந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருந்தனர். மீட்பு படையினர் ஒரு வாரமாக போராடி இடிபாடுகளில் சிக்கிய 27 பேரை உயிருடன் மீட்டனர். மேலும், இடிபாடுகளில் இருந்து 61 சடலங்களை எடுத்தனர். இந்த சோகம் மறக்கும் முன்பாக நேற்று அதிகாலையில் திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உப்பரபாளையத்தில் ஒரு குடோன் மதில் சுவர் இடிந்து, குடிசைகள் மீது விழுந்ததில் 11 பேர் இறந்துள்ளனர். மதில் சுவர் தரமான சிமென்ட் கொண்டு கட்டப்படவில்லை என்றும், மழையில் அது தாங்காமல் இடிந்து விட்டது என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சூழ்நிலையில், அடுக்குமாடி கட்டிடங்களுக்கு அனுமதி அளித்தல், தனியார் கட்டுமான நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல், பெரிய கட்டிடங்களில் இடிதாங்கும் வசதி, தீ தடுப்பு வசதிகள் போன்றவை இருப்பதை உறுதி செய்தல் என பல்வேறு விஷயங்களில் மாநில அரசு தீவிரமாக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் பெரும் பூகம்பம் ஏற்பட்டு சுமார் 20,000 பேர் பலியாயினர். அப்போது பெரிய, பெரிய கட்டிடங்கள் மண்ணில் புதைந்தன. இதன்பின், அந்த மாநில அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. அத்துடன், பெரிய கட்டிடங்கள் விதிமுறைகளின்படி கட்டப்படுவதில்லை என்பதை கண்டறிந்து ஒரு புதிய சட்டத்தை 2006ம் ஆண்டில் கொண்டு வந்தது. ‘குஜராத் புரபொஷனல் சிவில் இன்ஜினியர்கள் சட்டம்’ என்ற இந்த சட்டத்தின்படி, சிவில் இன்ஜினீயர்களுக்கு ஒரு கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது. மெடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்யாத டாக்டர், பார் கவுன்சிலில் பதிவு செய்யாத வக்கீல் எப்படி தொழில் செய்ய அனுமதி இல்லையோ, அதே போல் சிவில் இன்ஜினியர்கள் கவுன்சிலில் பதிவு செய்யாத சிவில் இன்ஜினியர் அந்த மாநிலத்தில் தொழில் செய்ய முடியாது.
அந்த கவுன்சிலில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்தலின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். அத்துடன் மாநில அரசின் 2 தலைமை பொறியாளர்கள், சிவில் இன்ஜினியரிங் பேராசிரியர், நகராட்சி பொறியாளர்களும் கவுன்சிலில் இடம் பெறுகிறார்கள். விதிகளை மீறி செயல்படும் சிவில் இன்ஜினியர்களின் பதிவை ரத்து செய்து, அவரை தொழில் செய்ய விடாமல் தடுக்க கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது. அதே போல், தவறு செய்யும் சிவில் இன்ஜினியர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கவும் அதிகாரம் உள்ளது. எனவே, குஜராத்தை போல் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வர தமிழக அரசும் தற்போது பரிசீலிக்கலாம். மேலும், தனியார் நிறுவனங்களின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ய அரசு சார்பில் தனி அமைப்பு ஏற்படுத்தவும் சிந்திக்கலாம்.