நகைக்கடை அதிபரிடம் கொள்ளை மேலும் 4 பேர் சிறையில் அடைப்பு
சென்னை: பாரிமுனையை சேர்ந்த நகைக்கடை அதிபரிடம் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.பாரிமுனை, என்எஸ்சி போஸ் சாலையில் நகைக்கடை வைத்திருக்கும் சகோதரர்கள் நிகில் (30), விஷால் (31). தி.நகரில் உள்ள 2 கடைகளுக்கு நகைகளை கொடுக்க இவர்கள் இருவரும் கடந்த 18ம் தேதி காரில் சென்றனர். அப்போது டிப்டாப் ஆசாமி ஒருவர், நூதன முறையில் இவர்களிடம் இருந்த 4.8 கிலோ தங்க நகைகளை அபேஸ் செய்து தப்பினார்.புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், திருச்சி, ராம்ஜி நகரை சேர்ந்த அழகுராஜா (23) என்பவர் நகை திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. தனிப்படை போலீசார், கடந்த சில தினங்களுக்கு முன் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 3.250 கிலோ தங்க நகையை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், நகை திருட்டில் உடந்தையாக இருந்த அழகுராஜாவின் கூட்டாளிகள் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த அய்யப்பன் (19), சம்பத் (19), கோபால கிருஷ்ணன் (22), ராஜிவ் (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 250 கிராம் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.