ஆவடி சமூக நலக்கூடத்தில் அரசின் மிக்சி, கிரைண்டர் கொள்ளை
ஆவடி: ஆவடியில் சமூகநலக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.ஆவடி ராமலிங்கபுரம் காந்தி தெருவில் உள்ள சமூக நலக்கூடத்தில் அந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய 200 ஜோடி மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி அடுக்கிவைக்கப்பட்டு இருந்தது. நாடாளுமன்ற தேர்தல் நடந்ததால் இலவச பொருட்கள் வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதனால் இலவச பொருட்களை மக்களுக்கு வழங்க முடியவில்லை.இந்நிலையில், அந்த பொருட்களை விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று ஆவடி வருவாய் ஆய்வாளர் செல்வம், சமூகநலக் கூடத்துக்கு சென்றார். அப்போது சமூகநலக்கூடத்தின் கதவு உடைக்கப்பட்ட இருப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே போய் பார்த்தார். அங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை கணக்கெடுத்தபோது 26 மிக்சி, 6 கிரைண்டர் காணாமல்போயிருப்பது தெரியவந்துள்ளது. இது பற்றி வருவாய் ஆய்வாளர் கொடுத்த புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சமூகநலக் கூடத்தில் மிக்சி, கிரைண்டர் கொள்ளையடித்தவர்கள் பற்றி விசாரிக்கின்றனர்.