சென்னை:முதன்முறையாக சொந்த குரலில் பாடுகிறார் சூர்யா.பிளாக் அன்ட் ஒயிட் பட காலத்தில் நடிகர், நடிகைகளுக்கு பாடவும் தெரிந்திருக்க வேண்டும். பின்னணி பாடகர்கள் மற்றும் டப்பிங் பேசும் கலைஞர்களின் வருகையையடுத்து நடிகர், நடிகைகள் பாடுவதை நிறுத்திக்கொண்டதுடன், சில நட்சத்திரங்கள் வசனம் பேசுவதையும் கைவிட்டனர். இவர்களில் கமல் தொடர்ந்து பாடகராகவும் தன்னை ஒவ்வொரு காலகட்டத்திலும் நிலை நிறுத்தி இருக்கிறார். ‘மன்னன் படத்தில் ரஜினி சொந்த குரலில் பாடினார். அதன்பிறகு ‘கோச்சடையான் படத்தில் பாடினார். விஜய், சிம்பு, தனுஷும் நடிப்பதுடன் அவ்வப்போது பாடலும் பாடுகின்றனர். அதேபோல் நடிகை, பாடகி என தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் ரம்யா நம்பீசன். லட்சுமி மேனனும் பாடுவதற்கு முயற்சித்து வருகிறார். சமீபத்தில் ஒரு படத்திற்காக சினேகா பாட ஒப்புக்கொண்டு ரெக்கார்டிங்கின்போது பின்வாங்கினார். தற்போது சூர்யா சொந்த குரலில் பாட முடிவு செய்திருக்கிறார். லிங்குசாமி இயக்கும் ‘அஞ்சான் படத்தில் அவர் பாடும் பாடல் யுவன் சங்கர் ராஜா இசையில் பதிவாக உள்ளது. ஏற்கனவே காபி விளம்பரம் ஒன்றுக்கு சூர்யா பாடி இருக்கிறார். முதன்முறையாக இப்படத்தில்தான் சினிமா பாடல் பாடுகிறார். இதுபற்றி பட தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் கூறும்போது,‘சொந்த குரலில் பாட வேண்டும் என்று அவரிடம் கூறியபோது உடனடியாக ஒப்புக்கொண்டு அதற்கான பயிற்சியும் தொடங்கினார். இப்படத்தின் ஆடியோ இம்மாத இறுதியில் வெளியாகும் என்றார்.