கேன்சரால் பாதித்த மம்தா டாக்டராக நடிக்கிறார்
சென்னை: இரண்டு முறை கேன்சர் தாக்கிய மம்தா புதிய படத்தில் டாக்டராக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ‘சிவப்பதிகாரம், ‘குரு என் ஆளு, ‘தடையறத் தாக்க போன்ற படங்களில் நடித்திருப்பவர் மம்தா மோகன்தாஸ். இவர் கேன்சர் நோயால் சில வருடங்களுக்கு முன் பாதிக்கப்பட்டார். அதற்கான சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் அவரை கேன்சர் நோய் தாக்கியது. அதுபற்றி கவலைப்படாமல் நடிக்க முடிவு செய்தார் மம்தா. வாய்ப்புக்காக காத்திருந்தவருக்கு மம்முட்டியுடன் ‘வர்ஷம் என்ற மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ரஞ்சித் சங்கர் இயக்குகிறார். இதுபற்றி இயக்குனர் கூறும்போது,‘மம்தாவுக்கு ஏற்ற வேடம் என்பதால் இப்படத்தில் அவரை தேர்வு செய்தேன். ஜெயஸ்ரீ என்ற டாக்டர் வேடத்தில் அவர் நடிக்கிறார். மம்முட்டி சாதாரண வியாபாரி வேடம் ஏற்கிறார். ஆகஸ்ட் மாதம் முதல் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளது என்றார். கேன்சரால் பாதித்து சிகிச்சை பெற்று வரும் மம்தா, டாக்டராக நடிக்க வேடம் ஏற்றதற்கு அவருக்கு நிறைய வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.