ஷரபோவாவுக்கு சச்சின் ரசிகர்கள் கண்டனம்
கடந்த சனிக்கிழமை விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை பார்க்க கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் சென்றிருந்தார். அங்கு விஐபி இருக்கையில் சச்சின், கால்பந்து பிரபலம் இங்கிலாந்தின் டேவிட் பெக்காம் ஆகியோர் போட்டியை ரசித்தனர். அன்று விளையாடிய ரஷ்யாவின் மரியா ஷரபோவாவிடம் விஐபி இருக்கையில் யார், யார் இருந்தனர் தெரியுமா என நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், பெக்காம் உள்ளிட்ட சிலரை கூறியிருக்கிறார். அதற்கு நிருபர்கள் சச்சினும் இருந்தார் பார்க்கவில்லையா என கேட்டுள்ளனர். அதற்கு அவர், ‘சச்சின் யாரென்றே தெரியாது’ என கூறியுள்ளார். கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கள் உலகம் முழுவதும் பிரபலமானவர். சச்சினை தெரியாது என ஷரபோவா கூறியிருப்பது பல்வேறு தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதற்கு சச்சின் ரசிகர்கள் டுவிட்டரில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். ‘ஷரபோவா, சச்சினை தெரியாது என்றால், உனக்கு வேறு எதுவுமே தெரியாது என்றுதான் அர்த்தம். முதலில் நீ யார் என்று உன்னையே கேட்டுக் கொள்’ என்று விமர்சனம் செய்துள்ளார் ரசிகர் ஒருவர். டுவிட்டரில் இது போன்று சச்சின் ரசிகர்கள் பலர் ஷரபோவாவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.