விவசாயி வீட்டுக்குள் புகுந்து பலாப்பழத்தை ருசித்த கரடி
களக்காடு:களக்காடு அருகே நள்ளிரவில் விவசாயி வீட்டிற்குள் புகுந்த கரடி, பலாப்பழத்தை ருசித்து சாப்பிட்டது.களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு வாழும் கடமான், கரடி, சிறுத்தை, யானை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் அடிக்கடி மலையடிவார கிராமங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வெளிவந்த கரடி, தலையணை மலையடிவாரத்தில் உள்ள சிவபுரம் கிராமத்திற்குள் புகுந்தது. பின்னர் அங்குள்ள விவசாயி தங்கபாண்டி (42) என்பவரது வீட்டிற்குள் நுழைந்தது. வீட்டில் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
கரடி புகுந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. வீட்டிற்குள் நுழைந்த கரடி அங்கிருந்த பலாப்பழத்தை ஒவ்வொன்றாக பிரித்து ருசித்து சாப்பிட்டது. அப்போது சத்தம் கேட்டதால் தங்கபாண்டி எழுந்து பார்த்தார். அங்கு கரடி பலாப்பழத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கரடி,கரடி என்று அபயக்குரல் எழுப்பினார். தங்கபாண்டியின் சத்தம் கேட்டு கரடி அங்கிருந்து ஓடிவிட்டது.இதுகுறித்து அவர் கூறுகையில், ‘காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது நள்ளிரவில் கரடி வீட்டிற்குள் புகுந்து பலாப்பழம் முழுவதையும் சாப்பிட்டு விட்டுச் சென்று விட்டது. நல்லவேளையாக கரடி எங்களை தாக்கவில்லை’ என்றார்.